திருச்செந்தூர் | மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள்
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கடந்த 3 ஆம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் மாசித் திருவிழாவின் 6 ஆம் நாள் என்பதாலும் திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அலகு குத்தி வரும் பக்தர்கள் கோயில் முன்பு அலகை எடுத்து விட்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்து வரும் பக்தர்கள் கோவில் முன்பு தங்களது காவடிகளை எடுத்து வைத்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி நாழிக் கிணற்றில் குளித்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் வரிசையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. பக்தர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.