ஹெல்மெட் அணியாமல் சிக்கிய டிக்-டாக் பிரபலம் - போலீசின் ‘ஸ்பாட்’ ஐடியா
லால்குடியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்று போலீஸாரிடம் அபராதம் செலுத்திய நடிகர், ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இதனால் மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடிய நபர்களின் எண்ணிக்கை சுமார் 90 சதவீதத்துக்கு மேல் தாண்டிவிட்டது. எனினும் ஊரகப் பகுதிகளில் இந்த சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாக கருதப்படுவதால், சமீபகாலமாக கிராமங்களை இணைக்கும் சாலைகளில்கூட போலீஸார் வாகன தணிக்கை நடத்தி அபராதம் வசூலித்து வருகின்றனர்.
இந்நிலையில் லால்குடியில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் கடந்த 28-ம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிக்-டாக் செயலி மூலம் புகழ் பெற்றவரும், ரஜினி முருகன், சென்னை-28, மெர்சல், விஸ்வாசம், சண்டைக்கோழி -2 உள்ளிட்ட படங்களில் நடித்த துணை நடிகருமான லால்குடி பகுதியைச் சேர்ந்த திருச்சி ரமேஷ் ஹெல்மெட் அணியாமல் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை மடக்கிய போலீஸார் ரூ.100 அபராதம் விதித்தனர். அதைக் கட்டாமல் தப்பிவிடும் நோக்கில் திருச்சி ரமேஷ் கெஞ்சியும் போலீஸார் விடவில்லை.
இதையடுத்து அபராதத்தை செலுத்திய திருச்சி ரமேஷ், மனைவியுடன் அங்கிருந்த புறப்பட தயாரானார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவரிடம், நீங்கள் நடிகர்தானே., ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக ஒரு வீடியோ போடலாமே எனக் கூறினார். இதைக்கேட்ட திருச்சி ரமேஷ் அந்த இடத்திலேயே, போலீஸாருடன் சேர்ந்த நின்றுகொண்டு ஒரு வீடியோ பதிவினை எடுத்து வெளியிட்டார்.
அதில் அவர் கூறும்போது, 'நானும், எனது மனைவியும் லால்குடியில் இருசக்கர வாகனத்தில் வந்தோம். ஹெல்மெட் அணியவில்லை என்பதால் சப் இன்ஸ்பெக்டர் என்னைப் பிடித்து அபராதம் விதித்துவிட்டார். ஏற்கெனவே ஒருமுறை கீழே விழுந்தபோதே ஹெல்மெட் போடுமாறு பலர் என்னிடம் கூறினர். ஆனால் நான் கேட்கவில்லை. இப்போது போலீஸாரிடம் மாட்டிக் கொண்டேன்.
நான் நடிகர் எனக் கூறினேன். அதற்கு, நடிகராக இருந்தால் என்ன? நடிகர் கீழே விழுந்தால் தலையில் அடிபடாதா? செல்போனை பாதுகாக்க கவர் போடுறீங்க? உயிரை பாதுகாக்க தலைக்கு ஹெல்மெட் போடுவதில் என்ன பிரச்னை? எனக் கேட்டு சப் இன்ஸ்பெக்டர் என்னிடம் சத்தம் போட்டார். அதன்பின் அபராதம் கட்டினேன். அத்துடன் இனிமேல் நான் எப்போதும் ஹெல்மெட் போட்டுதான் வண்டி ஓட்டுவேன். இதைப் பார்க்கும் நீங்களும் தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்' என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரிடம் கேட்டபோது, 'வாகனத்தை நிறுத்தியவுடனேயே அவரை நடிகர் என அடையாளம் கண்டுகொண்டேன். அவரது வீடியோக்களை யூ டியூப், பேஸ்புக், டிக்-டாக் மூலம் ஏற்கெனவே பார்த்துள்ளேன். அதில் சில வீடியோக்கள் 38 லட்சம் பேருக்கு மேல் பார்வையிட்டுள்ளதை அறிந்தேன். எனவே, அவரிடம் ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக ஒரு வீடியோ வெளியிடுமாறு கூறினேன். அடுத்த நொடியே அவர் அந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டார். அதுதான் இப்போது பரவி வருகிறது' என்றார்.