“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு

“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு

“ரேக்ளா காளையுடன் டிக் டாக்”- நீரில் மூழ்கி கோவை இளைஞர் உயிரிழப்பு
Published on

கோவையில் டிக்டாக் மோகத்தில் ஆழமான குட்டைக்குள் ரேக்ளா காளையுடன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரி‌ழந்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் மற்றும் இவரது மகன் விக்னேஷ்வரன் மேலும் இவரது நண்பர்கள் பரமேஸ்வரன், புவனேஸ்வரன், மாதவன் ஆகியோர் அதே பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். மேலும் ரேக்ளா ரேஸ் ஓட்டுவதும், காளைகளை தயார் செய்வதும் இவர்களுடைய பொழுதுபோக்காக இருந்துள்ளது. இவர்கள் கருமத்தம்பட்டி அருகே வடுகபாளையம் பகுதியிலுள்ள குட்டையில் ரேக்ளா காளைக்கு கடந்த சில தினங்களாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நான்கு பேரும் காளையுடன் குட்டையில் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற விக்னேஷ்வரன் நீரில் மூழ்கியதால் தன்னை காப்பாற்றும்படி கைகளை மேலே தூக்கி சைகை காட்டி உள்ளார். இதைக்கண்ட அவரது நண்பர்கள் விக்னேஸ்வரனை காப்பாற்ற போராடியுள்ளனர். அவர்களால் முடியாததால் அருகிலுள்ள பொதுமக்களை கூச்சலிட்டு உதவிக்கு அழைத்துள்ளனர். அதுவும் முடியாததால் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விக்னேஷ்வரனை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விக்னேஷ்வரன் இறப்பதற்கு முன்னர் காளையுடன் தண்ணீரில் எடுத்த டிக்டாக் வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அக்காட்சி அவரது நண்பர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. ரேக்ளா ரேசுக்கு தயார் செய்யும் காளைகளின் உடல் சோர்வை போக்க நீர்நிலைகளில் நீந்தச் செய்வது முக்கியமான பயிற்சிகளில் ஒன்று. அப்பயிற்சியை தன் காளைக்கு அளிப்பதற்காகதான் வடுக‌பாளையம் குட்டைக்கு நண்பர்களுடன் சேர்ந்து காளையை அழைத்துச் சென்றுள்ளார் விக்னேஷ்வரன். காளையை அங்கு குளிக்க வைத்து விட்டு, அதனை நீந்தச் செய்வதற்காக சற்றே ஆழமான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளார். ஓரளவு ஆழம் தானே என எண்ணி தனது காளையுடன் அங்கு டிக்டாக் எடுத்துள்ளார். திடீரென அதிக ஆழம் உள்ள பகுதியில்‌ அவர் சிக்கிக்கொண்டார். 

நீச்சல் தெரியாத விக்னேஷ் கைகளை உயர்த்தி தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். நண்பர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால் அவர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com