இரண்டரை லட்சம் கேமரா பதிவுகளை தொடர்ந்து கண்காணிக்கும் சென்னை காவல்துறை!
ஈஸ்டர் நாளன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் எனத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் உள்ள இரண்டரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், 620 தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 555 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மாநகரப் பகுதிகளில் சந்தேகமளிக்கும் வகையில் யாரேனும் சுற்றித் திரிகிறார்களா என பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு மேற்கொள்ளுமாறு காவல்துறை கூடுதல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே சென்னை பூந்தமல்லியில் என்.ஐ.ஏ மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிஷோரிடம் பூந்தமல்லி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
முன்னதாக, இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை அடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.