தொடரும் புலி வேட்டை: தமிழகத்தில் 3 ஆண்டில் 32 புலிகள் பலி
தமிழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டிற்க்குப் பிறகு 32 புலிகள் உயிரிழந்துள்ளன.
புலிகள் வேட்டை என்பது ஒரு தொடர்கதையாகவும், தீர்வில்லாத பிரச்னையாகவும் உள்ளது. 1969ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் புலிகள் உட்பட பல விலங்குகள் அழியும் நிலையில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து 1972ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தியப் புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் 1872 புலிகள் மட்டுமே இருந்ததாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. அத்துடன் அதே ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 1973ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இவ்வாறு பல சட்டங்களும், திட்டங்களும் விதிக்கப்பட்டாலும் தற்போது வரையிலும் புலிகள் வேட்டை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 32 புலிகள் உயிரிழந்துள்ளன. கடந்தாண்டில் உயிரிழந்த 8 புலிகளில், பெரும்பாலானவை வேட்டையாடி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. புலி வேட்டையில் ஈடுபட்டதாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், முறையான விசாரணை நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. புலி வேட்டையில் ஈடுபட்டதாக கைதானவர்களில் கடந்த 10 ஆண்டுகளில் ஒருவர்கூட தண்டனைக்கு ஆளாகவில்லை என்றும் சமீபத்தில் வெளியாகியான ஆய்வு அறிக்கைக் கூறுகிறது.