அதிகாலை முதலே பெய்த மழை.. இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு
திருவள்ளூரில் அதிகாலை முதலே இடியுடன் மழை பெய்து வரும் நிலையில் வைக்கோல் போரை மூடச் சென்ற விவசாயி இடி தாக்கி உயிரிழந்தார்.
இன்று அதிகாலை முதலே திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளான புழல், மாதவரம், மணலி, செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில், மாதர்பாக்கம் அடுத்துள்ள நேமலூர் பகுதியில் சந்திரன் என்ற விவசாயி, மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோல் போரை மூடுவதற்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், இடி தாக்கியதில் விவசாயி சந்திரன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பாதிரிவேடு காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.