1972-ல் அதிமுகவில் ஐக்கியம் To ராமநாதபுரம் சுயேட்சை வேட்பாளர் | ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கை A - Z!

மூன்று முறை தமிழக முதலமைச்சர், 5 ஆண்டுகள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என பல முக்கிய பதவிகளை வகித்த ஓபிஎஸ் இன்று தனி சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில், அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...
Jayalalitha ops
Jayalalitha opspt desk

1972-ல் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம:

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் பிறந்தவர் ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், கடந்த 1972 ஆம் ஆண்டு அதிமுகவை எம்.ஜி.ஆர் ஆரம்பித்தபோது அதில் இணைந்தார், 1977ஆம் ஆண்டு பெரியகுளம் நகர 18வது வார்டு கழக மேலமைப்பு பிரதிநிதி என்ற பதவியே அவரின் முதல் பதவி, அதன் பின் 1984 ஆம் ஆண்டு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் பதவி கிடைத்தது. தனது 33வது வயதில் அந்த பதவியை அடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்,

ttv, sasikala, Ops
ttv, sasikala, Opspt desk

ஜானகி அணியில் ஓபிஎஸ்:

கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்தபோது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று அதிமுக இரண்டாக பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைந்தபோது, அக்கட்சியின் பெரியகுளம் நகரக் கழகச் செயலாளர் பதவி 1993 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரசபை தலைவர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் அடைந்தார். 1996ஆம் ஆண்டு நகரசபை தலைவராக மட்டுமே இருந்த அவருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கவும், முதலமைச்சர் பதவி கிடைக்கவும் காரணமாக இருந்தவர்கள் சசிகலாவும் தினகரனும்தான்.

டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் அறிமுகம்:

அதிமுக பொருளாராக இருந்த தினகரன், 1999-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதுதான் பன்னீர் செல்வத்துடன் தினகரனுக்கு அறிமுகம் கிடைத்தது. தன்னுடைய வெற்றிக்காக உழைத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு 2001ஆம் ஆண்டு பெரியகுளம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வென்று முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைந்தபோதே அமைச்சராகி முக்கியமான இலாகாவான வருவாய்த் துறையை பெற்றார்.

ops, ttv dhinakaran
ops, ttv dhinakarantwitter page

ஜெயலலிதாவால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்:

ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறையாக பதவியேற்றார். டான்சி நில வழக்கில் ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்தபோது தமக்கு பதில் முதலமைச்சர் பதவிக்கு சுட்டிக்காட்ட அவரது அமைச்சரவையில் பொன்னயைன், தம்பித்துரை என மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தனர். ஆனால், அப்போதுதான் சட்டப் பேரவைக்குள் நுழைந்திருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சுட்டிக்காட்டினார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு அவரது நம்பிக்கையை பெற்றார் ஓ.பன்னீர்செல்வம். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 21 முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரை தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ் பணியாற்றினார்.

ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற ஓபிஎஸ்:

அந்த நம்பிக்கை எத்தகையது என பின்னர் ஜெயலலிதாவின் வாயாலேயே ஒரு மேடையில் விவரிக்கப்பட்டது. ராமர் வனவாசம் சென்றபோது அவருக்கு பதிலாக அரியாசனத்தில் அமர பரதனுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த அரியாசனத்தில் தாம் அமருவதற்கு பதில் ராமரின் பாத ரட்சயை வைத்து ஆட்சி செய்துவந்தார். பின்னர் ராமர் திரும்பி வந்ததும் அவரது கிரீடத்தை அவரிடமே கொடுத்தார். ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்ட இந்த சம்பவத்தை வரலாற்றில் நிகழ்த்திக் காட்டியவர் ஓ.பன்னீர்செல்வம் என புகழ்ந்துள்ளார் ஜெயலலிதா.

Jayalalitha Ops
Jayalalitha Opspt desk

இரண்டாவது முறையாக முதலமைச்சரான ஓபிஎஸ்:

2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை இழந்த நிலையில், 2006 - 11 கால கட்டத்தில் எதிர்கட்சிக் தலைவர், எதிர்கட்சி துணைத் தலைவராகவும் செயல்பட்டார், 2011 ஆம் ஆண்டு போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சராகவும்,அவை முன்னவராகவும் ஆனார், கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தபோதும், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சர் அரியணை ஏறினார். பின்னர் மீண்டும் ஜெயலலிதா விடுதலையான பின் அவரிடமே அந்த பதவியை வழங்கினார் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணத்திற்குப் பின் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை ஏற்ற ஓபிஎஸ், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு நடத்திய 40 நிமிட தியானம் தமிழ்நாட்டையே சென்னை மெரினாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது.

ஓபிஎஸ் தர்மயுத்தம்:

சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுதத்தை அன்று அவர் தொடங்கினார், 11 எம்.எல்.ஏ-கள் ஆதரவு மட்டுமே அன்று இருந்த நிலையில் சசிகலா கைது, தினகரன் மீது அதிருப்தி என பல்வேறு மாற்றங்களுக்கு பின் 21-08-2017 அன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் என்ற பதவியை பெற்றார் ஓபிஎஸ். 4 ஆண்டுகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து கட்சியை வழிநடத்திய நிலையில், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்த நேரத்திலும் தேர்தலுக்கு பின் யார் எதிர்கட்சித் தலைவர் என கேள்வி எழுந்த நேரத்திலும் இபிஎஸ் அந்த பதவிகளை பெற்றதால் பெரும் வருத்தத்திற்கு உள்ளானார் ஓபிஎஸ்.

ops eps
ops epspt desk

ஓற்றை தலைமை அதிமுக பொதுக்குழு தீர்மானம்:

இதைத் தொடர்ந்து கட்சி விவகாரங்களில் இரு தலைமை மத்தியில் மாற்று கருத்துக்கள் இருந்த நேரத்தில் மீண்டும் கட்சிக்கு ஒற்றை தலைமையை கொண்டு வர அதிமுக முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமையை அறிவிக்க இருந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பு காரணமாக அன்றைய பொதுக்குழு வேறொரு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 9.15 மணிக்கு பொதுக்குழுவை கூட்டினார் இபிஎஸ். ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 16 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு:

பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 17, 2022 அன்று ஜூலை 11 ஆம் தேதி, நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. செப்டம்பர் 02, 2022 அன்று தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு. இந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். செப்டம்பர் 06 அன்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கிடைத்த இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

eps
epspt desk

ஈரோடு இடைத்தேர்தல்:

அக்டோபர் 01, 2022 அன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதி அளித்தது. ஜனவரி 10, 11 2023 அன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் தங்களுடைய வாதங்களை நிறைவு செய்தன. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி 18 அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜனவரி 29, 2023 அன்று ஈரோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ்:

பிப்ரவரி 01, 2023 அன்று ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். பிப்ரவரி 03, 2023 அதிமுக வேட்பாளரை பொதுக்குழு கூடி தேர்வு செய்ய வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இடையீட்டு மனு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பிப்ரவரி 06, 2023 ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்முருகன் தேர்தலில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது. பிப்ரவரி 23, 2023 – கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

madras high court
madras high courtpt desk

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு:

மார்ச் 28, 2023 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் மனுக்களை தள்ளுபடி செய்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மார்ச் 29, 2023 அன்று எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

20.04.2023 அன்றுஇபிஎஸ் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நவம்பர் 16, 2023 அன்று அதிமுக சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. டிசம்பர் 18, 2023 அன்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என தன்னுடைய அணிக்கு பெயர் வைத்தார் ஓபிஎஸ். மார்ச் 18, 2024-ல் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிரந்தரத் தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மார்ச் 21, 2024 அன்று சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com