ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட மூவர் கைது
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்னிலம் கிராமத்தில் விளைநிலத்திற்கு மத்தியில் ஓ.என்.ஜி.சியின் எண்ணெய்க்குழாய் செயல்பட்டு வருகிறது. இந்த எண்ணெய் குழாய்களால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வருகிறது. மேலும், ஓ.என்.ஜி.சியின் எண்ணெய்க்குழாயால் விளைநிலங்கள் பாதிப்பதாக கூறி தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மக்கள் அதிகாரம் சார்பில் இன்று ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
அதேபோல், முன்னெச்சரிக்கையாக மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த திலக், அன்புச்செல்வன், உத்தமன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.