14 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய மூன்று செவிலியர்கள் - மலர் தூவி வரவேற்ற மக்கள்!
கொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று செவிலியர்களை ஊர் மக்கள் மலர் தூவி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை அருகே உள்ள திருப்பாலை பேச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அமுதா, முத்து மீனா, தவமணி ஆகிய செவிலியர்களும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
கிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வீடு திரும்பிய மூன்று செவிலியர்களையும் மலர் தூவி,பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி பொங்க உறவினர்களும், ஊர் மக்களும் வரவேற்றனர். இதில் இவர்களது தாயாரும் செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.