முன்னாள் மேயர் கொலையில் பெண் அரசியல்வாதிக்கு தொடர்பு..? நடந்தது என்ன..?
நெல்லை முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் கொலை வழக்கில் சட்டமன்றத் தேர்தலில் சீட் பெற்று தராததே காரணம் எனக் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பெண் திமுக அரசியல் பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன், வீட்டில் வேலை செய்த பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் ஜூலை 23-ம் தேதி மதியம் அவர்களது வீட்டில் வைத்து கத்தியால் குத்திப் படுகொலை செய்யபட்டனர். நேற்று பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச் சடங்கில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
கொலை நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், 3 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினாலும் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் காவல்துறை திணறி வருகின்றனர். காவல்துறை நகைக்காக நடந்த கொலை என்று கூறினாலும் அதை நிரூபிக்க முடியவில்லை. வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தினாலும் அதிலும் ஏமாற்றத்தில்தான் முடிகிறது.
இந்நிலையில் கொலை நடந்த வீட்டின் அருகே உள்ள ஒரு உணவு விடுதியில் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்த சிலர் பாதியிலே எழுந்து போனதாக உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். அந்த உணவகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பார்த்தபோது அதில் பெண் அரசியல் பிரமுகர் சீனியம்மாள் என்பவர் இருப்பது தெரியவந்தது. சீனியம்மாளுக்கு உமா மகேஸ்வரியுடன் ஆன தொடர்பு குறித்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
கடந்த 2016-ஆண்டு தேர்தலில் சீனியம்மாள் தனக்கு தெரிந்த நபருக்கு சீட் வாங்கி தரும்படி முருக சங்கரனை தொடர்பு கொண்டு 50 லட்சம் பணமும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் தொகுதிக்கு சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சீனியம்மாள் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி தராமல் தென்காசி பாராளுமன்றத் தொகுதிக்கு சீட் வாங்கி தருகிறேன் என முருகசங்கரன் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அதிலும் சீட் வாங்கி தர இயலவில்லை. இதனால் பல முறை பணம் கேட்டு சீனியம்மாள் வாக்குவாதம் செய்துள்ளார் என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்தக் கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.