சென்னை நாவலூர் அருகே பெண் மென் பொறியாளரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னை பெரும்பாக்கத்தில் பெண் ஐ.டி ஊழியரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் சுய நினைவ திரும்பிய பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான பெண் லாவண்யா, ஆந்திராவைச் சேர்ந்தவர். சென்னை நாவலூரை அடுத்த தாழம்பூரில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியது தெரிய வந்தது. பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூருக்கு சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். நிலைக்குலைந்த அவரை மிரட்டி 15 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரூபாய், விலை உயர்ந்த கைப்பேசியையும் திருடிச் சென்றனர். படுகாயங்களுடன் மயக்கமடைந்த அந்தப் பெண், அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், உயரதிகாரிகள் தலைமையில் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பெண் ஊழியரிடம் பறித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியதையடுத்து அவரிடம் காவல் துறையினர் வாக்குமூலம் பெற்றனர். இதில் தன்னை தாக்கிய நபர்கள் குறித்து போலிஸாரிடம் அவர் கூறியதாக தெரிகிறது. லாவண்யாவின் வாக்குமூலத்தை அடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலிஸார் , செம்மஞ்சேரி பகுதியில் பதுங்கியிருந்த சுமார் 12 பேரை பிடித்து விசாரித்த. அதில் தற்போது 3 பேரை கைது செய்துள்ளனர்.