“லஞ்சம் வாங்குவதை வீடியோ எடுத்ததால் மிரட்டுறாங்க”-சத்தியமங்கலம் சோதனை சாவடி குறித்து ஓட்டுநர் வீடியோ

மீண்டும் மீண்டும் சர்ச்சை பண்ணாரி வன சோதனைச் சாவடியில் வீடியோ எடுத்த வாகன ஓட்டுநரின் செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியை பறித்து கொண்டு வனத் துறையினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
driver
driverpt desk

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறை சோதனைச் சாவடி உள்ளது. வனப் பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு வன சோதனைச் சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பண்ணாரி வன சோதனைச் சாவடி வழியாக சென்ற வாகனத்தை நிறுத்திய வனத்துறை ஊழியர்கள் தீபக்குமார் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் லஞ்சம் கேட்டு தர மறுத்த ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Forest staff
Forest staffpt desk

இதையடுத்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தவிட்டார்.

இந்நிலையில், இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட தாளவாடி மலைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜெகா என்பவர் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி வன சோதனைச் சாவடி பகுதியில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சோதனைச் சாவடி பணியில் இருந்த வனக் காப்பாளர் சித்ரா, வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் மனோஜ், அருண் பாண்டியன் ஆகிய மூவரும் வீடியோ எடுத்த ஓட்டுநர் ஜெகாவின் செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியை பறித்துக் கொண்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ஓட்டுநர் ஜெகா வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பழனிக்கு தினமும் மாட்டுத் தீவனம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பண்ணாரி சோதனை சாவடியில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு ஓட்டுநரை வனத் துறையினர் லஞ்சம் கேட்டு தாக்கினர்.

அந்த சம்பவத்தை நான் செல்போனில் வீடியோ எடுத்ததால், பண்ணாரி வன சோதனைச் சாவடியில் நான் ஓட்டிச் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது, ‘நீதானே; வீடியோ எடுத்து வெளியிட்டது’ எனக் கூறி எனது செல்போனை பறித்து வாகனத்தின் சாவியையும் பறித்து வைத்துக் கொண்டனர்.

viral video
viral videopt desk

இந்த சாலையில் நீ எப்படி வாகனம் ஓட்டுகிறாய் என பார்த்துக் கொள்கிறோம்’ என மிரட்டியதோடு எனது செல்போனை காவல்துறை சோதனை சாவடி பணியில் இருந்த காவலர் சரவணன் என்பவரிடம் கொடுத்து செல்போனில் இருந்த புகைப்படம், வீடியோ உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அழித்துவிட்டு செல்போன் மற்றும் வாகனத்தின் சாவியை கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதைத் தொடர்ந்து செல்போன் மற்றும் சாவியை மாலை 3 மணிக்கு திருப்பிக் கொடுத்தனர்.

நீ இந்த சாலையில் எப்படி வாகனம் ஓட்டுகிறாய், பார்க்கிறோம்’ என மிரட்டியதால் எனக்கு மிகவும் பயமாக உள்ளது” என அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, இது சம்பந்தமாக விசாரிக்கப்படும் என தெரிவித்தார். அதேபோல் செல்போனில் இருந்த ஆதாரங்களை காவல்துறை சோதனை சாவடி பணியில் இருந்த காவலர் சரவணன் என்பவர் அழித்தது குறித்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் கேட்டபோது, காவலர் சரவணனை நேரில் அழைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தார்.

ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு வனத்துறை சோதனை சாவடியில் வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்ட நிலையில், மீண்டும் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டி வாகன ஓட்டுநரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com