நெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி !
நெல் ஜெயராமனின் இறுதி சடங்கு இன்று மதியம் நடைபெற உள்ள நிலையில் ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக பார்க்கப்பட்டவர். இதுவரை 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்த பெருமை இவரையே சாரும்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வருட காலமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுச் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் நெல் ஜெயராமனின் உடல் நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், காமராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், நடிகர்கள் கார்த்தி, சூரி உள்ளிட்டோரும் நெல் ஜெயராமனின் உடலுக்கு அஞ்சலி செலித்தினர். இதனை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நெல் ஜெயராமனின் மறைவு அவரது சொந்த ஊரான கட்டுமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் என டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் நெல் ஜெயராமனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.