வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உலக பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தலமாக விளங்குகிறது.. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணமாகவும், சுற்றுலாவாகவும் வந்து செல்கிறார்கள். கடந்த புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கிறிஸ்தவர்களின் புண்ணியத்தலமாக விளங்கும் வேளாங்கண்ணியில் இன்று அதிகாலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .பேராலயத்தின் கலை அரங்கில் நேற்று இரவு 11:45 மணி முதல் பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியபடி பிரார்த்தனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில், இயெசு உயிர்தெழுந்த நிகழ்வுகள் தத்ருபமாக வடிவமைக்கப்பட்டு நடத்தி காட்டப்பட்டது. இதையடுத்து உயிர்த்தெழுந்த இயேசு வருகிற காட்சியின்போது, வானவேடிக்கைகளும் நடைபெற்று பேராலயம் வண்ண விளக்குகளால் ஒளிந்தது. இதைத் தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும் நிறைவேற்றப்பட்டது. ஈஸ்டர் பெருவிழாவின் சிறப்பு அம்சமாக புது நெருப்பு புனித படுத்துதல் பாஸ்கா திரி பவனி மற்றும் பாஸ்கா புகழ்இடம் பெற்றன.
திருச்சடங்குகளை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை ஆசிர் வழங்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்டமொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.