நீட் எதிர்ப்பு: வலுக்கிறது தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டம்
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் முழக்கம் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், அனிதாவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
திருச்சியில் நான்காவது நாளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூரில் அரசுக் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசுக் கலைக்கலூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் பேரணியாக வலம் வந்தனர். கல்லூரி வளாகத்தில் அமர்ந்தபடியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2ஆவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் நெல்லை பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கெடுத்து கொண்டனர். வகுப்புகளை புற்கணித்தும் கல்லூரி முன்பு போராட்டம், நடத்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
நீட்டுக்கு எதிராக 2 வது நாளாக கடலூரில் மாணவ மாணவிகள் போரட்டம் நடத்தினர். நீட் தேர்வை ரத்து செய்வேண்டும், தரமான கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை முன் வைத்து கிருஷ்ணசாமி தனியார் கல்லூரி மாணவர்கள், தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான மாணவர்கள் திரண்டு கைகோர்த்தபடி நின்றும் ஒப்பாரி வைத்தபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரியில் இருந்து சென்னை, திண்டிவனம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.