விருதாச்சலத்தில் திருடப்பட்ட சோழர் கால சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
விருத்தாலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்தது கடந்த 2002ம் ஆண்டு கடத்தப்பட்ட நரசிம்மி என்கிற பிரத்யங்கரா தேவியின் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
1046ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த சிலையுடன், அர்த்தநாரீஸ்வரர், இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி மற்றும் விநாயகர் சிலைகளும் ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டன. இந்த கடத்தல் பற்றி புகார் தெரிவிக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறைத்ததாக கூறுகிறார்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள். பதினொன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த கடத்தல் பற்றி அறிந்து தாமாக வழக்குப்பதிந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் நடவடிக்கையின் பலனாக நீண்ட போராட்டத்திற்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து அந்த சிலை தற்போது மீட்கப்பட்டுள்ளது. சிலையின் மதிப்பு ரூ.1.49 கோடியாகும். சிலையை கடத்திய முக்கிய குற்றவாளி சுபாஷ் கபூர் ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற எண்ணற்ற சிலைகள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் விவரங்களும் எண்ணிக்கையும் சரிவர தெரிய, இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைக்க வேண்டும் என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுக்கின்றனர்.