TNTET தொடர்பான திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றகோரி இரவு வரை போராடியவர்கள் கைது

TNTET தொடர்பான திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றகோரி இரவு வரை போராடியவர்கள் கைது
TNTET தொடர்பான திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றகோரி இரவு வரை போராடியவர்கள் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து இரவு 10 மணி வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும். கடந்த 2021-ம் சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். பணி நியமனத்தின் போது வயதை கருத்தில் கொண்டு பழையபடி வயது தளர்வு அளிக்க வேண்டும்” உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். இந்த போராட்டத்திற்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நேரில் ஆதரவு அளித்தார். அவர்களிடம் பேசியபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், “ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டித் தேர்வு என்ற அரசாணை எண் 149ஐ நீக்கம் செய்ய வேண்டும். 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காலிபணியிடங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரப்ப வேண்டும். நிச்சயம் பணிக்கிடைக்கும் என்று போராடி வருகிறார்கள்.

இவர்கள் கோரிக்கை நியாயமான கோரிக்கை. ஆசிரியர்கள் கோரிக்கையை விரைவில் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம். திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கும் நிலையில், இந்த பிரச்னை முதல்வரிடம் முறையாக கொண்டு செல்லப்பட்டதாக தெரியவில்லை” என கூறினார்.

இதையடுத்து பேசிய TNTET ஆசிரியர்கள் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அல்டாஸ், “எங்கள் கோரிக்கைகள் குறித்து பேச முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் அவர்களை சந்திக்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறினார்.தங்களுடைய கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பொதுப்பிரச்சனையாக கொண்டு செல்ல வேண்டும். எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறது. எங்கள் போராட்டாம் தொடர்வதாக கைது செய்தாலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என எச்சரித்தார்

இந்நிலையில், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பல்வேறு கட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் `முதல்வரையோ, தலைமை்செயலாளரையோ நேரில் சந்தித்து பேசிய பிறகு தான் கலைந்து செல்வோம் என்று இரவு 10 மணி வரை’ என்ற தீரக்கமான முடிவில் சாலையில் படுத்து இருந்தனர். சிலர் கைதுக்கு பயந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தியிடம், தலைமை செயலாளரின் உதவியாளர் தொடர்பு கொண்டு, அரசு விடுமுறை தினத்திற்கு பின்பு தலைமை செயலாளரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியதாக வந்த தகவலின் அடிப்படையில் `போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம்’ என்று கூறினார்.

ஆனால் சிலர் முடிவு எட்டும்வரை போராடுவோம் என்று கூறி கலைந்துபோக மறுத்தனர். அப்படி 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது சில பெண்கள் கலைந்துபோக மறுத்ததால், அவர்களை பெண் போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிச்சென்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com