"போட்டியிட வாய்ப்புப் பெறாதவர்கள் சோர்வடைய வேண்டாம்" - முதல்வர் பழனிசாமி
பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு நேர்காணலில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. அதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7ஆயிரத்து 967 விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவைத்தலைவர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் இந்த நேர்காணலை நடத்துகின்றனர். விருப்பமனு தாக்கல் செய்த அனைவரிடமும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படுகிறது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதல்கட்டமாகவும், பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை இரண்டாம் கட்டமாகவும் நேர்காணல் நடைபெறுகிறது. நேர்க்காணலின்போது பேசிய, எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தங்களை வேட்பாளர்களாக நினைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும், உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார். மேலும் நேர்காணலில் கலந்து கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் கூட முதலமைச்சராகவோ, ஒருங்கிணைப்பாளராகவோ இருக்கலாம் என, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.