தூத்துக்குடியில் எம்.பி. கனிமொழியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்! #Video

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற கனிமொழி எம்.பி.-யின் வாகனத்தினை பெண்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிகளுக்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி., சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பூங்கா பணி ஆகியவற்றையும் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும் தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியிலும் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இதற்கிடையில் கழுகுமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கனிமொழி எம்.பி. காரில் சென்ற போது, வானரமுட்டி கிராமத்தில் அவரது வாகனத்தினை வழிமறித்த பெண்கள், “எங்கள் பகுதியில் குடிநீர் வரவில்லை. இதனால் கடும் அவதிப்பட்டு வருகிறோம். விரைந்து எங்கள் பகுதியில் பிரச்னையை தீர்க்க வேண்டும்” என்று முறையிட்டனர்.

வானரமுட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி எம்.பி தெரிவித்தார். அவருடன் அமைச்சர் கீதாஜீவன் உடனிருந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com