தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டின் அருணா ஜெகதீசன் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வது தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது ஸ்னோலின் தாயார் வனிதா பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை காக்கா குருவிவை சுடுவதுபோல 14 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கையில் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாத வகையில், 16 பேர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். என் மகளை இழந்து எனது குடும்பத்தினர் நித்தமும் ரத்தக் கண்ணீர் வடித்துவருகிறோம். வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த எனது மகள் ஸ்னோலினை இழந்துவிட்டோம். இதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய வேண்டும்.
தமிழக அரசு, அருணா ஜெகதீசன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருக்கும் வகையில், 16 பேர் மீதும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எடப்பாடி அரசிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தாங்கள் ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆடு மாடுகளைபோல சூழ்ச்சி செய்து சுட்டுக்கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
ஆனால் 14 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும், ஈடு செய்ய இயலாது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இதுவரை முறையாக வந்து சேரவில்லை.14 பேர் உயிர் போனதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இன்றளவிற்கும் மாற்றுத்திறனாளிகளாக துடிக்கும் நபர்களுக்கும், போதிய உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் ரஜினி பேசுகையில் , “தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அறிக்கை மீதான நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். அருணா ஜெகதீசன் அறிக்கை கசிந்தது குறித்தது தொடர்பாக அரசு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சை தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் வன்மையாக கண்டிக்கிறோம், ஜெயக்குமார் சமூக பொறுப்பற்ற தன்மையுடன் பேசிவருகிறார். முறையாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை குழுவிற்கு நன்றி.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது போல், சட்டப்பேரவையில் அறிக்கை மற்றும் அறிக்கை மீதான நடவடிக்கை ஆகிய இரண்டையும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும். வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். துப்பாக்கிச் சூட்டின்போது பயங்கரவாத அமைப்பு புகுந்துள்ளதாகக் கூறி துப்பாக்கிச் சூட்டிற்கு ஆதரவாக பேசி திசை திருப்பிய நடிகர் ரஜினிகாந்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை என கூறியுள்ளனர். எனவே துப்பாக்கிச் சூடு கொலைக்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.