தூத்துக்குடி | சிவில் நீதிபதியானார் மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட விஏஓ-வின் மகன்!

தூத்துக்குடியில் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன், சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றிய மகனை பற்றிய செய்தித் தொகுப்பு...
படுகொலை செய்யப்பட்ட தன் தந்தையின் உருவப்படம் முன்  சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்
படுகொலை செய்யப்பட்ட தன் தந்தையின் உருவப்படம் முன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்புதிய தலைமுறை

செய்தியாளர் - சின்ன ராஜன்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சூசை பாண்டியாபுரம் பகுதியை சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவருக்கு - போன்ஸீட்டாள் என்பவருடன் திருமணமாகி அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் சேவியர், கடந்த 25.04.2023 அன்று மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ்
படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் pt desk

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோரை உடனடியாக கைது செய்த காவல் துறையினர், 57 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் கொலை நடந்த 143 வது நாள் (15.09.2023) அன்று குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தூத்துக்குடி மாவட்டம் முதன்மை நீதிமன்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் மகன் மார்ஷல் ஏசுவடியான் கூறுகையில் தற்போது சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதுபற்றி நம்மிடையே அவர் பேசுகையில்,

“புதுக்கோட்டையில் இயங்கி வரும் பி.எஸ் பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்த என்னை, தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி., படிக்க வைத்தார் எனது தந்தை லூர்து பிரான்சிஸ். என்னை எப்படியாவது நீதிபதியாக பார்க்க வேண்டும் என்பதே அவரது பெரிய கனவாகவே இருந்தது. ஆனால், மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தாய் மற்றும் சகோதரருடன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்
தாய் மற்றும் சகோதரருடன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்pt desk

இருப்பினும் எனது தந்தையின் கனவை நனவாக்கும் வண்ணம், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளேன்.

என்னை போன்ற இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் படிக்க வேண்டும், படிப்பு ஒன்றுதான் நம்மளை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும்.

தற்பொழுது எங்கள் தந்தை எங்களை விட்டு சென்றாலும் எனது தாயார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றி வருகிறார்.

அதேபோல் எனது சகோதரன் ரயில்வே துறையிலும், எனது சகோதரி ஆசிரியர் தேர்வுக்கு எழுதிய நிலையில் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நானும் நீதிபதியாக ஆகிறேன். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எனது தந்தையின் கனவை நனவாக்கி இருக்கிறேன்” என்றார்.

சகோதரர், சகோதரியுடன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்
சகோதரர், சகோதரியுடன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்pt desk

தாயார் போன்ஸீட்டாள் கூறுகையில்... “எனது கணவர் இறந்தபோது மிகவும் துயரமான நிலையில் கஷ்டத்தில்தான் இருந்தேன். பின் கொஞ்சம் மீண்டாலும், இப்போது இந்த நிலையில் என் மகனைப் பார்க்க இல்லையே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருப்பினும் எனது மகன் நீதிபதியானதை நினைத்துப் பார்த்தால் என் கணவர் மணலில் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

தாய் மற்றும் சகோதர, சகோதரியுடன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்
தாய் மற்றும் சகோதர, சகோதரியுடன் சிவில் நீதிபதியாக தேர்வான மார்ஷல் ஏசுவடியான்pt desk

என்னை போன்று பல தாய்மார்கள் இது போன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், அனைவரும் சோர்ந்து விடாமல் அடுத்து என்ன பண்ண வேண்டும் என்பதை உணர்ந்து, பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்து ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார்.

இதேபோன்று ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளார் சுரேஷ்குமார் கூறுகையில்... “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலர், காவல்துறை மற்றும் ராணுவத்தில் சேர்ந்து சேவை பரிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் நீதிபதியாக வேண்டும் என்ற கனவில் நான் நன்றாக படித்து தேர்வெழுதி தற்போது தேர்வாகியுள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” எனக் கூறினார்.

தூத்துக்குடி அருகே உள்ள இரண்டு கிராமத்தைச் சேர்ந்த இவருவர் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com