தூத்துக்குடி | கடலோரப் பகுதிகளின் உயிர் கவசம்.. அலையாத்திக் காடுகளைக் காக்கும் வனத்துறை!!
புயல், கடல் அரிப்பு மற்றும் ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கும் உயிர் கவசமாக விளங்கும் அலையாத்தி காடுகளைப் பாதுகாத்து, அதன் பரப்பளவை அதிகரிக்கும் பணிகளில் தமிழ்நாடு வனத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வெள்ளக்காடு, கண்டல் காடு, மாங்குரோவ் காடு என்றும் அழைக்கப்படும் இக்காடுகளின் தனிச்சிறப்பு, ஆக்சிஜன் பெறுவதற்காக நிலத்துக்கு வெளியே நீளும், சுவாசிக்கும் வேர்கள் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னக்காயல், பழையகாயல், காயல்பட்டினம் போன்ற கடலோரப் பகுதிகளில் இக்காடுகள் பரந்து காணப்படுகின்றன.
மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ள இவை, பல்வேறு மீன்கள், களி நண்டு, வெள்ளை இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் முக்கிய இனப்பெருக்க மையமாகவும் திகழ்கின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் மார்ச் வரை வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் ஆயிரக்கணக்கான பறவைகளின் வாழிடமாகவும் இக்காடுகள் விளங்குகின்றன. கடலுக்குள் பவளப்பாறைகள் எவ்வாறு கடல்வளத்தை பாதுகாக்கின்றனவோ, அதேபோல் கரையோரத்தில் அலையாத்தி காடுகள் இயற்கை அரணாகச் செயல்படுவதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். மீன்வளத்தைப் பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளின் கண்ணா செடிகள் குறித்து மீனவர் சக்தி புதிய தலைமுறையிடம் பேசினார்.
இக்காடுகளைப் பெருக்கும் நோக்கில் வனத்துறையினர் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விதைகளைச் சேகரித்து, சிறிய கால்வாய்கள் அமைத்து புதிய செடிகளை வளர்த்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 130 ஹெக்டேர் பரப்பளவில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டு, சேதமடைந்த பகுதிகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இக்காடுகளைப் பாதுகாக்க உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தச் சிறு கடனுதவிகள் மற்றும் விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் இளையராஜா தெரிவித்தார்.

