தூத்துக்குடி துப்பாக்கி்ச்சூடு: மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று நேரில் விசாரணை நடத்துகிறது.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேரில் சென்று விசாரணை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடிக்கு அனுப்புகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையமே, தூத்துக்குடிக்கு நேரடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தவுள்ளது. இந்த அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். 4 பேர் கொண்ட குழு, தனது விசாரணை அறிக்கையை 2 வாரங்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.