பணியில் இல்லாத இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார் - வெளிவரும் உண்மைகள்

பணியில் இல்லாத இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார் - வெளிவரும் உண்மைகள்

பணியில் இல்லாத இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை தாசில்தார் - வெளிவரும் உண்மைகள்
Published on

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் சேகருக்கு, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தில் அவர் எந்த அடிப்படையில் பணி மேற்கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 22ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேபோல துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியும் வலுவாக முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்டு துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் என்பது தெரியவந்தது.  தூத்துக்குடி சிப்காப்ட் காவல் நிலையத்தில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தூத்துக்குடி கலெக்கர் அலுவலகம் அருகே நடந்த வன்முறையின் போது துப்பாக்கிச் சூட்டிற்கு தான் உத்தரவிட்டதாக சேகர் தெரிவித்திருந்தார்.

முதல் தகவல் அறிக்கையில் சேகர் கூறியிருப்பதாவது:- “ 144 தடை உத்தரவையும் மீறி நாம் தமிழர், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்தனர். 10,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வாகனங்களை அடித்து நொறுக்கியடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். சட்டவிரோதமாக கூடி வன்முறை செயலில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கப்பட்டது. கலைந்து செல்லாவிடில் துப்பாக்கியால் சுட நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டது. தொடர்ந்து கலவரக் கும்பலை எச்சரிக்கும் விதமாக காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எச்சரித்தும் வன்முறை தொடர்ந்ததால் துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட நேரிட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 பேரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அதிகாரிகளை நியமித்து உட்கோட்ட நடுவர் மற்றும் ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு கிடைத்துள்ளது. 21.05.2018 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “ தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை 22.05.2018 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது. எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாவண்ணம் நிர்வாகத்துறை நடுவர்கள் நியமனம் செய்து உத்தரவிடப்படுகிறது. 22.05.2018 அன்று காலை 6 மணி முதல் மறு உத்தரவு வரும் குறிப்பிட்ட மையங்களில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் காவல்துறையினருடன் இணைந்து கண்காணிக்கவும் அவ்வப்போது நிலைமைகள் குறித்து தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் துணை வட்டாட்சியர் சேகருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்: - 1. பாத்தீமா நகர், 2. லயன்ஸ் டவுண், 3 புதுத்தெரு, 4 சோரிஸ்புரம், 5. தூத்துக்குடி மாதா கேவில், 6. திரேஸ்புரம் சந்திப்பு. அதேபோல தனி வட்டாட்சியர் ராஜ்குமார் என்வருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், 1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 2. மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு, 3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக சந்திப்பு. 4. சோரிஸ்புரம்.

காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் சேகர் கொடுத்த தகவலின்படி தூத்துக்குடி கலெக்டர் அலுலவக துப்பாக்கிச் சூடு இடத்தில் சேகர் இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கோ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 12 கி.மீ தூரத்திற்கு தான் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சேகருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பணி ஒதுக்கப்படவில்லை. ஆட்சியர் அலுவலகம் அருகே பணி ஒதுக்கப்பட்டது தனி வட்டாட்சியர் ராஜ்குமாருக்குதான். ராஜ்குமாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சேகரால் எப்படி பணியாற்றி அதுவும் துப்பாக்கிச் சூட்டிற்கு எப்படி உத்தரவிட முடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. சேகர் தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏன் பணி செய்யவில்லை..? அவரை இடம் மாறி வேலை செய்யச் சொன்னது யார்..? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

அதேபோல துணை வட்டாட்சியர் கண்ணனுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்: 1. மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், 2. மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக சந்திப்பு (தூத்துக்குடி- மதுரை நான்கு வழி சாலை). 3. ரயில்வே E.B. அலுவலகம், 4. நெல் கொள்முதல் குடோன் சந்திப்பு  மடத்தூர் ரோடு, 5. மடத்தூர் சந்திப்பு, 6 மடத்தூர்  ஆகிய இடங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரோ காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் “ திரேஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள காவலர்கள் குடியிருப்புக்குள் சுமார் 500 பேர் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட நேரிட்டது” என கூறியுள்ளார்.

Courtesy: Times Now 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com