
தூத்துக்குடி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாகக் கூட்டம் கூட்டிய அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 80 பேர் மீது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரூபம் கே. வேலவன் தலைமையில், விளாத்திகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளாத்திகுளத்தில் அதிமுக பெயரில் ஆலோசனை கூட்டம் நடத்தியவர்கள் அமமுகவினர் என தெரிவித்துள்ளார். அதிமுக பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறி திரண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தியதாக, ரூபம் கே. வேலவன் உள்ளிட்ட 80 பேர் மீது விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.