இரண்டாவது நாளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தொடரும் ஆய்வு
இரண்டாவது நாளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கோவில்களில் உள்ள சிலைகள் உண்மையானவையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் பிரிவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 4539 ஐம்பொன் சிலைகள் உள்ளது.
(மாதிரிப்படம்)
இந்த சிலைகளின் தொன்மை தன்மை குறித்து 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் மாதம் முதல்கட்டமாகவும், நவம்பர் முதல் வாரத்தில் இரண்டாம் கட்டமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மூன்றாம் கட்டமாக நேற்று ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டன. முதல்நாளான நேற்று 12 கோயில்களைச் சேர்ந்த சிலைகள் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டாவது நாளாக இன்றும் ஆய்வு தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 615 சிலைகளின் தொன்மைத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.