PT செய்தி எதிரொலி: மீண்டும் புத்துயிர் பெறுகிறது திருவாரூர் மனுநீதி சோழன் மணிமண்டபம்
புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, திருவாரூர் சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதி சோழன் மணிமண்டபம் சீர்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூரில் பனகல் சாலையில் உள்ள சோமசுந்தரம் பூங்காவில் மனுநீதி சோழன் மணி மண்டபம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாமல், நகராட்சி குப்பை வண்டிகளும், நாய்களின் புகலிடமாகவும் மணிமண்டபம் மாறியிருந்தது. நகராட்சி குப்பைகளும் இங்கே தான் பிரிக்கப்பட்டுவந்தது. இதனால் பொதுமக்கள் மணிமண்டபத்திற்கு செல்ல முடியாத நிலை உருவானது.
அனைத்துக்கும் மேலாக இம்மணிமண்டபம் இரவு நேரங்களில் மதுக் கூடாரமாகவும் மாறியது. இந்த அவலநிலையை தொடர்ந்து, “நீதியை நிலைநாட்ட, சொந்த மகனையே தேர் ஏற்றி கொன்று தண்டனை வழங்கிய நீதிக்கு பேர் போன மனுநீதி சோழனின் மணிமண்டபம் புத்துயிர் பெற வேண்டும்” என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது.
தொடர்புடைய செய்தி: திருவாரூர்: குப்பைக் கிடங்காக மாறிப்போன மனுநீதி சோழன் மணிமண்டபம்
புதிய தலைமுறையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையரின் கண்காணிப்பில் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு அங்குள்ள மதுபாட்டில்கள் உள்ளிட்ட தேவையில்லாத மற்றும் மக்களுக்கு இடையூறாக இருந்தவை அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் இந்த மண்டபத்தை புனரமைத்து வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.