சர்ச்சை எதிரொலி: சனாதனம் தொடர்பான கருத்தரங்கை ரத்து செய்த திருவாரூர் அரசுக் கலைக் கல்லூரி!

சனாதனம் குறித்த கருத்தரங்கு ரத்து செய்யப்படுவதாக திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி
திரு.வி.க. அரசு கலைக்கல்லூரிகோப்புப் படம்

வைரல் ஆன சனாதனம் பற்றிய பேச்சுகள்!

தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே சனாதனம் பேச்சுகள் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அமைச்சர் உதயநிதியில் ஆரம்பித்த நெருப்பு இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. திமுக - பாஜக இடையே கருத்து மோதலாக இது தொடர்கிறது. இந்த நிலையில், திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை புதிய விவாதத்திற்கு காரணமானது.

திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி வெளியிட்ட அறிக்கை!

அது வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், “இக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதன எதிர்ப்புப் பற்றிய தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று மாலை 3 மணியளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

வானதி சீனிவாசன் எதிர்ப்பு

இதுகுறித்து வானதி சீனிவாசன் தன்னுடை ட்விட்டர் பக்கத்தில், ‘சனாதனம் குறித்து அரசுக் கல்லூரி மாணாக்கரிடையே திமுக நஞ்சை விதைக்கிறது எனவும், திருவாரூர் திரு.வி.க. அரசுக் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் சாசன அமைப்புக்கு எதிராக இல்லையா’ எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மீண்டும் அறிக்கைவிட்ட அரசுக் கலைக்கல்லூரி

இதைத் தொடர்ந்து திருவாரூர் அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் மீண்டும் ஓர் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். அதில், “கல்லூரியில் 12.09.2023 அன்று சனாதனம் குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மாணவிகள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இது தவறான புரிதலின் காரணமாக மாறுப்பட்ட செய்தி வடிவில் ஊடகங்களில் பரவி வருகிறது. இது யாருக்கும் சாதக பாதகமாக இல்லாமல், நடுநிலையோடு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையாகும்.

இதனை, மேற்காண் தேதியில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக 13.09.2023 அன்று மாற்று சுற்றறிக்கை கல்லூரி மாணவிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவிகள் 12.09.2023 அன்றைய சுற்றறிக்கையின்படி அல்லாமல், தங்களது சொந்த விருப்பத்தின் பேயரிலேயே செயல்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஊடங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானது என மறுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்ட கல்லூரி நிர்வாகம்

இந்த நிலையில், திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி சார்பில் இன்று (செப்.14) மீண்டும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சனாதனம் குறித்த கருத்தரங்கு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிக்கையில், ‘திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி, பொறுப்பு முனைவர் பி.ராஜாராமனால் 12.09.23 மற்றும் 13.09.23 ஆகிய தினங்களில் அனுப்பப்பட்ட சனாதனம் கருத்தரங்கு குறித்த சுற்றறிக்கைகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகிறது என அறிவிக்கலாகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com