இடைத்தேர்தல் நடக்குமா, நடக்காதா ?

இடைத்தேர்தல் நடக்குமா, நடக்காதா ?
இடைத்தேர்தல் நடக்குமா, நடக்காதா ?

திருவாரூரில் புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் மாவட்டத் தேர்தல் அதிகாரியின் அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பு.

கடந்த ஆண்டின் இறுதி நாள் அனைவரும் புதிய ஆண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டதுடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது. இடைத்தேர்தல் அறிவிப்பை வரவேற்ற அரசியல் கட்சிகள் அதே நேரத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த முயற்சி மேற்கொள்ளாமல் தனியாக திருவாரூக்கு மட்டும் தேர்தல் அறிவிக்க காரணம் என்ன? என்ற கேள்வியையும் முன்வைத்தன. அதே நேரத்தில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்குவது, நிவாரணப் பணிகளை பாதிக்கும் என்பது பல கட்சிகளின் கருத்தாக இருந்தது. இதே கருத்தை முன்வைத்து விவசாய சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின்போது தலைமைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்த பின்னரே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்றம் ஜனவரி மூன்றாம் நாள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் டி ராஜா தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தார். இந்த மனுவை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்தது. 

இந்நிலையில் திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி டி ராஜா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்த உகந்த சூழல் உள்ளதா? என்பது பற்றி‌ அறிக்கை தரும்படி தேர்தல் நடத்தும் அதிகாரியை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதனால் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான நிர்மல் ராஜ் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், அனைத்துக் கட்சி தரப்பினரும் இதில் பங்கேற்றனர். ஆலோசனையின் போது அனைத்துக்கட்சியினரும் திருவாரூர் மாவட்டத்தில் நிவாணரப்பணிகள் முழுமையான நடைபெறாததால், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், தற்போதைய சூழலில் திருவாரூர் இடைத்தேர்தல் தேவையற்றது என்றும், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்திக்கொள்ளலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.இதனால் திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறுமா? என்பது மதில் மேல் பூனைக் கதையாகவே உள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com