திருவாரூரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: ரூ.3.19 லட்சம் அபராதம் விதிப்பு
திருவாரூரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்ததாக கூறி பேரூராட்சி அலுவலகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சி அலுவலகம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தேவர்கண்டநல்லூர் பகுதியில் வீதி வீதியாக ஆய்வு பணியில் ஈடுபட்ட அவர், ஓஎன்ஜிசி நிறுவனத்திலும் சுகாதார பணிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார்.
வெங்காரப்பேரையூர் பகுதியில் ஓய்வுபெற்ற காவலர் வீட்டில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரம் இல்லாமல் இருந்ததாக கூறி அவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு ஒழிப்பு பணியின்போது 3 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.