வசூல் ராஜா பாணியில் ஆள்மாறாட்டம் செய்த பாஜக நிர்வாகி.. கம்பி எண்ண வைத்த திருவாரூர் போலீஸ்!

வசூல் ராஜா பாணியில் ஆள்மாறாட்டம் செய்த பாஜக நிர்வாகி.. கம்பி எண்ண வைத்த திருவாரூர் போலீஸ்!
வசூல் ராஜா பாணியில் ஆள்மாறாட்டம் செய்த பாஜக நிர்வாகி.. கம்பி எண்ண வைத்த திருவாரூர் போலீஸ்!

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் பாஸ்கர். இவர் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் மூலம் இளங்கலை அரசியல் பிரிவில் படித்து வருகிறார். மூன்று ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பில் இறுதி ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலையில் அவருக்கு பதிலாக திருவாரூரை சேர்ந்த திவாகர் மாதவன் என்பவர் தேர்வு எழுத சென்றுள்ளார்.

தேர்வு அறையில் தேர்வு கண்காணிப்பாளர் ஒவ்வொரு மாணவர்களையும் பரிசோதிக்கும் பொழுது திவாகர் மாதவன் புகைப்படம் இல்லாமல் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் புகைப்படம் அடங்கிய ஹால் டிக்கெட் அங்கு இருந்தது. ஆள்மாறாட்டம் செய்து திவாகர் மாதவன் தேர்வு எழுத வந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தேர்வு கண்காணிப்பாளர் நாகரத்தினம் புகார் அளித்தார்.

மேலும் திவாகர் மாதவனிடம் விசாரணை மேற்கொண்ட கல்வி துறை அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். அதில் திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் பாஸ்கர் அவர்களின் ஹால் டிக்கெட் மற்றும் அவருடைய புகைப்படம் ஒட்டிய ஏனைய பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூரை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ரமேஷ் என்பவர் திரு.வி.க கல்லூரிக்கு வந்து அவருக்கு தெரிந்த தகவல்களை கல்வித்துறை அதிகாரியிடம் தெரிவித்தார். இது தொடர்பாக பேசியுள்ள திவாகர் மாதவன், எனக்கு ரமேஷைதான் தெரியும், அவர் மூலமாகத்தான் இந்த தேர்வை எழுந்த ஒப்புக்கொண்டு வந்தேன் எனக் கூறியுள்ளார்.

இதற்கு ரமேஷும், நான் தான் எழுத சொன்னேன் எனவும் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை நேற்று கைது செய்தார்கள். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் கொண்டு திருவாரூர் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கரை தேடி வந்தார்கள்.

இப்படி இருக்கையில், இன்று (ஆக.,14) திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் சரணடைந்தார். அதன் பிறகு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வு திருவாரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com