
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரையும் தீபத்தையும் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் தங்கி தீப தரிசனம் காண இருப்பதால் இங்குள்ள 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 25 ஆம் தேதி மட்டும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் ஒரு அறைக்கு 1000, 2000, 3000 என்று கட்டண வசூல் செய்து வந்த நிலையில், கார்த்திகை தீபத் திருநாளன்று பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர் வேறு வழியின்றி இவர்களை கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து பக்தர்களும் தங்கி வருகின்றனர்.
ஒரு ஏசி அறைக்கு மற்ற நாட்களில் 1500 ரூபாய் வாங்கும் நிலையில், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் 15000 முதல் 40 ஆயிரம் வரை விடுதிகளுக்கு தகுந்தவாறு தாருமாறாக கட்டணத்தை உயர்த்தி பக்தர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது.. என்ன செய்வது வருடத்திற்கு ஒரு நாள் தான் இந்த தீபம் வருகிறது. அன்று தான் நாங்கள் இந்த கட்டண உயர்வை பார்க்க முடியும் எவ்வளவு கட்டணம் உயர்த்தினாலும் அதை கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதனால் இந்த கட்டண உயர்வை அறிவிக்கிறோம் என்றனர்.
இவ்வளவு கட்டணம் கொடுத்து தங்க வேண்டுமா என்று பொது மக்களிடம் கேள்வி எழுப்பிய போது.. ”என்ன செய்வது இங்கு வந்து விட்டோம் இவர்கள் கேட்பதை கொடுத்தாவது தங்க வேண்டும் வேறு எப்படி தங்குவது என்பதே தெரியவில்லை வேறு வழியில்லாமல் தான் கொடுக்கிறோம்” என்று மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகமோ காவல் துறையோ தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.