திருவனந்தபுரம் நவராத்திரி விழா: பாத யாத்திரைக்கு தமிழக-கேரள அதிகாரிகள் அனுமதி

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: பாத யாத்திரைக்கு தமிழக-கேரள அதிகாரிகள் அனுமதி
திருவனந்தபுரம் நவராத்திரி விழா: பாத யாத்திரைக்கு தமிழக-கேரள அதிகாரிகள் அனுமதி

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாமி சிலைகளை வழக்கம்போல் பாத யாத்திரையாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பண்டைய திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின்போது திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தேவாரக்கெட்டு சரஸ்வதி, குமாரகோயில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சாமி சிலைகள் தமிழக - கேரள காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையோடு திருவனந்தபுரத்திற்கு பாதயாத்திரையாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக, சிலைகளை பாதயாத்திரையாக கொண்டு செல்லாமல் வாகனங்களில் மூன்று சிலைகளையும் கொண்டு செல்ல தமிழக கேரள அறநிலையத் துறை அதிகாரிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையொட்டி, இன்று கேரளா அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில், கேரள தமிழக அறநிலையத்துறை அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முடிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

பாரம்பரியமாக நடைபெறுவதுபோல் இந்த ஆண்டு பாதயாத்திரையாக 3 சாமி சிலைகளையும் கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் வழக்கமாக சாமி சிலைகளுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வரவேற்பு கொடுப்பதுபோல் இந்த ஆண்டு அவ்வாறான வரவேற்பு நிகழ்ச்சிகள் எதுவும் கூடாது எனவும் சாமி சிலைகள் செல்லும்போது பொதுமக்கள் கூடி நிற்க கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவையொட்டி,  நாளை பத்மநாபபுரத்தில் இருந்து மூன்று சிலைகளும் பல்லக்குகளில் பாத யாத்திரையாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com