திருக்குறளில் இருந்து கிடைத்த உந்துதலால்தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது - ஆர்.என்.ரவி!
திருக்குறளில் இருந்து கிடைத்த உந்துதலால்தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் திருவள்ளுவர் திருநாள்கழகம் சார்பில், திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் ரவி,
“பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவரின் மிகப்பெரிய பக்தர்; திருவள்ளுவரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார்; பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களுக்கு திருக்குறள் உந்துதலாக இருக்கிறது.
”கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
எனும் குறளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையின் அடிநாதத்தில் திருவள்ளுவர் இருக்கிறார்; சொல்லப்போனால் புதிய கல்விக்கொள்கை உருவாக்க காரணமாக திருவள்ளுவர்தான் இருந்துள்ளார். 70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் பாடத்திட்டத்தைதான் பயின்று வந்தோம். அது நம் அறிவை பெரிய அளவிற்கு வளர்க்கவில்லை.
தமிழ்நாடு ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: “வைகாசி அனுஷத்தையொட்டி தமிழ் நாள்காட்டிக்கு ஏற்ப திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழாவில் உரையாற்றிய ஆளுநர் ரவி அவர்கள், திருவள்ளுவரை சனாதன தர்மத்தின் தலைசிறந்த புலவர்களில் ஒருவராகவும், திருக்குறளை தர்ம சாஸ்திரம் மற்றும் நீதி சாஸ்திரத்தின் நித்திய சங்கமமாகவும் உள்ளதாக எடுத்துரைத்தார். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் நரேந்திர மோடி, நிர்வாகக் கொள்கைகள், கல்வி, பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு அல்லது வெளியுறவுக் கொள்கை என எதுவாக இருந்தாலும், திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தால் அவை எவ்வாறு ஆழமாக ஈர்க்கப்பட்டுள்ளன என்பதையும், தமிழ் மொழியின் ஒரு பெரிய அபிமானியாக அவர் எவ்வாறு தமிழையும் திருக்குறளையும் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார் என்பதையும் ஆளுநர் விளக்கினார்.
மனிதகுலத்தின் நன்மைக்காக வளர்ச்சியைந்த பாரதத்துக்கு வழிகாட்டும் சக்தியாக திருக்குறளை அதன் முழு ஆன்மிக மகத்துவத்தில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இவ்வாறு ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.