திருவள்ளூர் | இரண்டு நாட்களில் 10க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய தெரு நாய்கள்- பொதுமக்கள் அச்சம்
செய்தியாளர்: எழில்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புங்கம்பேடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் பத்துக்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலையில் செல்வோரை விடாமல் விரட்டி விரட்டிக் கடித்துக் குதறி உள்ளது தெருநாய். பாதிக்கப்பட்டவர்கள் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் பரத் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதே போல மீஞ்சூர் பேரூராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலையில் விளையாடும் குழந்தைகள், கடைக்கு செல்லும் பெண்கள், என ஒருவரையும் விட்டு வைக்காமல் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
அண்மைக்காலமாக மீஞ்சூர் பேரூராட்சியில் தினந்தோறும் தெருநாய் கடித்து பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரு நாய்களின் இனப்பெருக்கதை கட்டுப்படுத்தும் முயற்சியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.