பொன்னேரி வரதட்சணை கொடுமை
பொன்னேரி வரதட்சணை கொடுமை முகநூல்

மற்றொரு வரதட்சணை கொடுமை... திருமணமான 4 நாட்களில் ; தாய் வீட்டில் உயிரைவிட்ட மணப்பெண்!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பாதிப்பு நெஞ்சை விட்டு அகலவில்லை. இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.
Published on

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகள் லோகேஸ்வரி. 22 வயதான லோகேஸ்வரி பிஏ பட்டதாரி ஆவார்.. இவருக்கும், அதே பொன்னேரியை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது.. பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பன்னீர் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில்தான், திருமணத்திற்குப் பிறகு, மறுவீட்டு விழாவுக்காக புதுத்தம்பதியினர் லோகேஸ்வரியின் தாய்வீட்டுக்கு சம்பவம் நடந்த முந்தைய நாள் மாலை வந்திருந்தனர். அன்று இரவு குடும்பத்தினர் அவர்களுக்கு விருந்து அளித்த பின், அனைவரும் தூங்குவதற்காக சென்றுள்ளனர்.

இரவு நேரத்தில் லோகேஸ்வரி கழிவறைக்குச் சென்றார், ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதைக் கவனித்த அவரது தந்தை கஜேந்திரன் கதவைத் தட்டினார். எந்த பதிலும் இல்லாததால், அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

குடும்பத்தினர் உடனடியாக லோகேஸ்வரியை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதுகுறித்து லோகேஸ்வரியின் அப்பா கஜேந்திரன் பொன்னேரி போலீசில் புகார் தந்தார். அதில், 'எனது மகளுக்கும் காட்டாவூரை சேர்ந்த பன்னீர் என்பவருக்கும் கடந்த 27ம் தேதி திருமணம் நடந்தது. 4 சவரன் நகை, பைக், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுத்தோம். திருமணம் முடித்த நாளிலிருந்து வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தியுள்ளனர். எனது மகளின் செல்போனை பறித்து வைத்துள்ளனர். ஏசி கட்டாயம் வேண்டும் மேலும் மீதம் தரவேண்டிய ஒரு சவரன் நகை, ஏ.சி. வீட்டிற்கு தேவையான பொருட்களை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். நேற்றிரவும் இதுகுறித்து எனது மகளிடம், பன்னீர் கேட்டு சண்டையிட்டார். இருவரையும் சமாதானம் செய்தோம். எனது மகளின் சாவுக்கு பன்னீர் மற்றும் அவரது குடுபத்தினர் தான் காரணம்.’ என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். அதில், 1 சவரன் நகைக்காக அதாவது 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பொன்னேரி வரதட்சணை கொடுமை
அதிர்ச்சி.. தமிழகத்திலிருந்து அமெரிக்க ராணுவத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! 300 மெயில் ஐ.டி. பயன்பாடு!

மேலும், குடும்பத்தின் மூத்த மருமகள் 12 சவரன் வரதட்சணை கொண்டு வந்ததாகவும், நீ 4 சவரன் மட்டுமே கொண்டு வந்துள்ளதாகவும் திருமணமான முதல் நாளே லோகேஸ்வரியை குத்திக் காட்டியுள்ளனர் . காலையிலேயே எழுந்ததும் துணி துவைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவ வேண்டும், சோபாவில் உட்கார கூடாது என்றெல்லாம் ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் மறுவீட்டுக்கு வந்தபோது, தன்னுடைய அம்மா, தங்கையிடம் சொல்லி அழுதுள்ளார் லோகேஸ்வரி.

போலீஸ் விசாரணையில், லோகேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியது உறுதியான நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக 108 BNS பிரிவில் வழக்கு பதிந்து கணவர் பன்னீர், மாமியார் பூங்கோதை ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மாமனார் ஏழுமலை மற்றும் கணவனின் அண்ணி நதியா ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணமாகி 4 நாளில் மணப்பெண் வரதட்சணை கொடுமையால் இறந்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com