“லஞ்சம் வாங்கலன்னு ஒருத்தர் சொல்லுங்க.. நான் உங்க கால்ல விழுறேன்” - முடிவில் கிடைத்த ஷாக் ரிப்ளை!

இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள் என ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி கேட்டதற்கு ஒருவர் கூட பதில் கூறாமல் இருந்த நிகழ்வு திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நவம்பர் ஐந்தாம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் நகராட்சி அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு குறித்து அறிவுரைகள் கூறி உறுதிமொழி ஏற்றனர்.

அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பேசிய திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் தமிழரசி, ஊழல் அதிகமுள்ள 185 நாடுகள் பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எந்த துறையில் ஊழல் அதிகமாக உள்ளது என கூறுங்கள் என ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆர்.டி.ஓ அலுவலகம் என அவர்கள் பதில் அளித்த நிலையில், ஊழல் இல்லாமல் ஒருதுறையும் இல்லை எனவும், “இத்தனை வருட அரசு பணியில் லஞ்சம் வாங்கவில்லை என யாராவது ஒருவர் கூறுங்கள். நான் உங்கள் காலில் விழுகிறேன்” எனவும் கூறினார் ஆய்வாளர் தமிழரசி. அவர் தெரிவித்ததற்கு ஒரு அரசு அதிகாரி கூட பதில் கூறாமல் மெளனம் காத்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com