பத்தாம் வகுப்பு படித்துவிட்டு போலி ஆர்டிஓ அலுவலராக வலம் வந்தவர் கைது
திருவள்ளூரில் வாகன ஓட்டிகளிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் எனக்கூறி பணம் பறித்து வந்த போலி ஆர்டிஓ அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் ஒருவர் வட்டார போக்குவரத்து அலுவலர் எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் மிரட்டி பணம் பறிப்பதாக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவர் திருவள்ளூர் தாலுக்கா காவல் துறையினருக்கு புகார் அளித்தார்.
தகவலறிந்த போலீசார் காக்களூர் பகுதியில், வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்து வந்த போலி ஆர்டிஓ அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அந்த போலி ஆர்டிஓ அலுவலர் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பொற்செல்வன் என்பதும், அவர் 10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.