காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் புகார்தாரர்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முறையாக குழந்தைநேய காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
வண்ணவண்ண சித்திரங்கள் வரையப்பட்ட சுவர். பொம்மைகள், நாற்காலிகள், விளையாட்டு பொருட்கள், ஓவியப் புத்தகங்கள் என காட்சியளிக்கும் இடம் குழந்தைகள் பராமரிப்பகமோ, Kinder Gartenனோ அல்ல. திருவள்ளூரில் உள்ள காவல்நிலையம். குழந்தைகளுடன் காவல் நிலையம் வரும் பெண்களுக்காக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், குழந்தைகளுடன் காவல் நிலையம் வரும் பெண்கள்தான். திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1269 பெண்கள் காவல் நிலையத்தை பல்வேறு உதவிக்காக அணுகியுள்ளனர். அவர்களில், சுமார் 640 பேர் குழந்தையுடன் காவல் நிலையம் வந்துள்ளனர். பெண்களின் அச்சத்தை போக்கவும், அவர்களது குழந்தைகளுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை காவல் நிலையங்களில் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
அதன்படி மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு காவல் துறையும் தனியார் அமைப்பும் இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களையும் குழந்தைநேய காவல் நிலையமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, திருவள்ளூர், திருத்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் குழந்தைநேய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன், “விளையாட்டு உபகரணங்கள் தவிர, குழந்தைகளுக்கு பால், சுடுதண்ணீர் வைக்க ஏற்பாடுகளும், வழக்கு விசாரணைக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மகளிர் காவல் நிலையங்களில் அடுத்தக்கட்டமாக குழந்தைநேய காவல் நிலையங்கள் தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த குழந்தைநேய காவல் நிலையங்கள், புகார் அளிக்க வரும் பெண்களின் அச்சத்தை போக்கி காவல்துறையுடன் நட்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.