ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா.. திருவள்ளூரில் 1500-ஐ நெருங்கும் பாதிப்பு
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1500-ஐ நெருங்கியுள்ளது
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அதன் பாதிப்பு 1500-ஐ நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொன்னேரி பேரூராட்சியின் 9-வது வார்டில் கடந்த 5-ஆம் தேதி 79 வயதான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவரோடு தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது மனைவி, 3 மகள்கள், 2 மருமகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அந்த தெருவை சுகாதாரத் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் மூடினர். அங்குள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், வெப்ப நிலையும் அளவிடபட்டன.
நேற்று அதிகபட்சமாக பூந்தமல்லியில் 14 பேர், ஆவடியில் 13 பேர், திருவள்ளூரில் 12 பேர் என நேற்று மட்டுமே 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1476 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து 771 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது