திருவள்ளூர்: போட்டி போட்டு முந்திச் சென்ற வாகனங்கள்: பரிதாபமாக 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: போட்டி போட்டு முந்திச் சென்ற வாகனங்கள்: பரிதாபமாக 3 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர்: போட்டி போட்டு முந்திச் சென்ற வாகனங்கள்: பரிதாபமாக 3 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லாரியும் ஆம்னி பேருந்தும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 30 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்றது. அதேபோல, ஆந்திராவில் இருந்து லாரி ஒன்றும் சென்னை நோக்கி சென்றது. அப்போது திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில் சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு முந்திச் சென்ற நிலையில், லாரி மீது ஆம்னி பேருந்து மோதியது.

இதில்,ஆம்னி பேருந்தின் இடது பகுதி முழுவதுமாக நசுங்கி கோர விபத்து ஏற்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது லாரி தலைகீழாக கவிழ்ந்தும், ஆம்னி பேருந்து உருக்குலைந்தும் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து சுமார் ஒருமணி நேரம் போராடி 3 பேரை சடலமாக மீட்டனர். மேலும் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே உயிரிழந்தவர்கள் யாரென அடையாளம் காணப்பட்டது. காக்கிநாடாவைச் சேர்ந்த ஆம்னி பேருந்தின் கிளீனர் ஸ்ரீதர் (27), நெல்லூரைச் சேர்ந்த தொக்கலா சதீஷ் குமார் (27) மற்றும் சென்னை நாவலூரைச் சேர்ந்த தும்பலா ரோஹித் பிரபாத் (33) என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரின் சடலங்களையும் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கவரைப்பேட்டை காவல் துறையினர் விபத்து ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின் ஓட்டுனர் கிஷோர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com