காதில் ஹெட்செட்டுடன் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு..!
காதில் ஹெட்செட் வைத்து பாட்டுக் கேட்டுக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவன், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்தவர் மிதுன்(18). இவர் திருநின்றவூர் பகுதியில் உள்ள ஜெயா கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இன்று வழக்கம்போல, காலையில் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். ரயிலில் செல்ல திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து கோவை சென்ற சதாப்தி விரைவு ரயில் மிதுன் மீது மோதியது. இதில், மிதுன் ரயிலில் சிக்கி இழுத்து செல்லப்பட்டதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அந்த விரைவு ரயில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலதுறையின் விசாரணையில் உயிரிழந்த மாணவன் மிதுன், காதில் செல்போன் ஹெட்செட் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டு தண்டவாளத்தை கடந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் சதாப்தி விரைவு ரயில் 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்றது.