திருத்தணி முருகன் கோயில் நுழைவு வாயிலின் கோபுரக் கலசம் காணாமல் போனதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்கு மலைப்படிகள் மூலம் பக்தர்கள் நடந்து செல்லும் மாடவீதியின் நுழைவு வாயிலில் ஒரு காளிகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மீது மூன்று கலசங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு கலசம் மாயமானதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதவிர, கோபுரத்தில் உள்ள சிலைகளும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கும் பக்தர்கள், புதிய கலசம் பொருத்தி பழுதடைந்துள்ள சிலைகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்நிலையில், வேகமாக காற்று வீசும்போது கலசம் கீழே விழுந்ததாகவும், அதை எடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் கோயில் நிர்வாகம், சீரமைப்பதற்கு அறநிலையத் துறையிடம் அனுமதி கோரியிருப்பதாக தெரிவித்துள்ளது.