திருப்பரங்குன்றம் | நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு.. அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு!
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற அனுமதியளித்து, தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், தேவையற்ற பதற்றத்தை தடுப்பதாகக் கூறி காவல்துறையினர் மனுதாரர் தரப்பினரை தீபமேற்ற அனுமதிக்கவில்லை. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ராம ரவிக்குமார் மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. மலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. 200 காவல்துறையினர் எங்களை சூழந்துகொண்டனர். எங்களை உத்தரவை நடைமுறைப்படுத்த அனுமதிக்கவில்லை. தமிழக அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதிக்க இயலாது என கூறினார்கள். நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை" என தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசுத் தரப்பில் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, CISF கமாண்டண்ட் உத்தரவை நிறைவேற்ற இயலவில்லை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

