திருப்பரங்குன்றம் விவகாரம் | சிறுபான்மையின வாக்குகளை பெற திமுக இரட்டை வேடம் - வானதி சீனிவாசன்
செய்தியாளர்: ஐஸ்வர்யா
திருப்பரங்குன்றம் விவகாரம் - இந்து அமைப்புகள் போராடவில்லை. பாஜக தான் போராடுகிறது:
திருப்பரங்குன்றம் மலை கோயில் விவகாரம் தொடர்பாக நேற்று இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னையில் செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, இந்தப் போராட்டத்தில் இந்து அமைப்புகள் போராடவில்லை. பாஜக தான் போராடுகிறது என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து இன்று வானதி சீனிவாசன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது...
சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலின் புனித தன்மையைக் கெடுக்க நினைக்கின்றனர்:
திருப்பரங்குன்றம் முருகன் இருக்கக்கூடிய இடம், தமிழ் கடவுள் முருகன் வழிபாடு, நூற்றாண்டுகளாக இந்த நாட்டில் உள்ளது. இதை திமுக புரிந்து கொள்ள வேண்டும். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என தமிழர்கள் போற்றி வழிபடக் கூடிய சூழல் உள்ளது. கோயிலின் மலையை ஒரு சில சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்கள் புனித தன்மையைக் கெடுக்க நினைக்கின்றனர்.
சிறுபான்மையின வாக்குகளை பெற திமுக இரட்டை வேடம்:
திட்டமிட்டு மத மோதலை உருவாக்க நினைக்கின்றனர். இதற்கு அந்த பகுதி அத்தனை சமுதாய பெரியவர்களும் போராடி வருகின்றனர். இந்துகளுக்காக குரல் கொடுக்க பாஜக முன் வருகிறது. இதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கோயில் கும்பாபிஷேகம், குடமுழுக்கு , ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு செய்வதாக கூறுகின்றனர், திட்டமிட்ட ரீதியில் சிறுபான்மையின வாக்குகளுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏன் இரட்டை வேஷம் போடுகின்றனர்.
இந்து மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறது:
மக்கள் ஜனநாயக ரீதியில் கருத்து சொல்வதற்கு கூட நீதிமன்றம் சென்று அனுமதி பெற வேண்டிய நிலைமையை இந்துக்களுக்கு வைத்துள்ளீர்கள்? என்ன சமூக நீதி அரசு? என்ன திராவிட மாடல் அரசு? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக இந்து மக்களுக்கு துரோகம் செய்கிறது, புண்படுத்துகிறது, ஏமாற்றுகிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.