விஜய் அரசியல்வாதியாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் நடிகராகவே பார்க்கிறார்கள் - திருமாவளவன்
செய்தியாளர்: ஆனந்தன்
எழுத்தாளரும் திரைப்பட பாடலாசிரியருமான உமா சுப்ரமணியன் எழுதியுள்ள மகளின் மகள் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா, சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்வி கழகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
அமைச்சரவையில் மாற்றம்.. விசிக வரவேற்கிறது...
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்... வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் இன்றைக்கு கட்டுக்கோப்பாக இருக்கின்ற அணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அணி. தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது முதலமைச்சர் அதிகாரத்தோடு தொடர்புடையது. அண்மையில் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டிய சில விவகாரங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தையும் மதிக்கக் கூடிய வகையில் முதல்வர் இந்த மாற்றங்களை செய்துள்ளார். அதனை விடுதலை சிறுத்தை கட்சி வரவேற்கிறது.
மனோ தங்கராஜ் அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை முதலமைச்சர் வழங்க முன்வந்திருக்கிறார் கட்சியின் நலன் ஆட்சியின் மீதான மதிப்பு தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றையெல்லாம் பார்த்து அதன் அடிப்படையில் இந்த மாற்றத்தை முதல்வர் மேற்கொண்டு இருக்கிறார். என்பதை நாம் அறிவோம் அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
நடிகர் விஜய் அவர்கள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தாலும் கூட இன்னும் நடிகராகவே அவர்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள், தலைவர் என்கிற முறையில் அவருக்கும் தொண்டர்களை முறைப்படுத்துவதற்கான பொறுப்பு இருக்கிறது. காலப்போக்கில் இன்னும் எல்லாம் சரியாகிவிடும் என்று கருதுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்தார்.