“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்
இந்திய தொல்லியல்துறையின் ஆதரவில்லை என்ற காரணத்தை காட்டி தமிழக அரசு கீழடி அகழ்வாராய்ச்சி பணியை கைவிடக்கூடாது என திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது “முதல் கட்ட அகழ்வாய்வில் உறை கிணறு, இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் சாய பட்டறை கண்டறியப்பட்டது. மூன்றாவது அகழ்வாய்வில் எதுவும் கண்டறியப்படவில்லை. நான்கு மற்றும் 5 ஆம் கட்ட அகழ்வாய்வு பணிகளில் நீர் வழிப்பாதை, உலோக நாணயகங்கள், சுடு மண்ணால் தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. கிமு 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கண்டறியப்பட்ட தொல்லியல் எச்சங்கள் இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இந்திய தொல்லியல்துறையின் ஆதரவில்லை என்ற காரணத்தை காட்டி தமிழக அரசு இப்பணியை கைவிட்டுவிட கூடாது. தமிழர்கள் நாகரிகமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த சான்றுகள் தெரிகிறது. இது பெருமைக்குறியது. அரசியல் நெருக்கடி காரணமாக அமைச்சர் பாரத நாகரீகம் என பேசி உள்ளார்.
கேரளாவில் நடந்த தொல்லியல்துறை ஆய்வு ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் நிறுத்தப்பட்டது போன்று, கீழடியிலும் நிறுத்திவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.