'ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது' - திருமாவளவன்

'ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது' - திருமாவளவன்

'ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது' - திருமாவளவன்
Published on

பல்கலைக்கழகங்களை ஆளுநர் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை சென்ட்ரலில் அமைந்துள்ள தென்னக ரயில்வே அலுவலகத்தில் பொது மேலாளரை விசிக தலைவர் திருமாவளவன், கட்சியின் தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகளோடு சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழா விவகாரம் தொடர்பாக பேசிய திருமாவளவன், ‘’தமிழக ஆளுநரின் போக்கு மாநில அரசின் மரபுகளுக்கு எதிராக இருக்கிறது. ஆளுநரின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு போகாமல் பல்கலைக்கழகங்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆளுநரின் இந்த போக்கு கைவிடப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.

அத்துடன், “இலங்கையில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இலங்கைக்கு இந்தியா நிதி உதவி செய்து வருகிறது. இந்திய ஒன்றிய அரசு கூடுதலாக தமிழத்தை நோக்கிவரும் அகதிகளுக்கு உதவிசெய்ய வேண்டும். அகதிகளுக்கு உரிய பராமரிப்பு மற்றும் வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்’’ என்றார்.

தொடர்ந்து ‘’புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் இயங்கக்கூடிய விசிகவின் ரயில்வே தொழிலாளர் முன்னணி, அம்பேத்கர் பெயரில் இயங்குவது, விழா கொண்டாடுவது நிர்வாக அடிப்படையில் சிலர் மீது சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல. ஹெல்லர் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடனே சென்னைக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

மேலும் முதல்வர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பது வேதனை அளிக்கிறது. விரைவில் குணமடைய வேண்டும். பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com