”காதலுக்கு எதிர்ப்பு சொல்லாமல், நம்பும்படி பேசி வரவழைத்து கொலை செய்துள்ளார்கள்” - திருமாவளவன்!
நெல்லையில் தனது சகோதரியை காதலித்தார் என்பதற்காக ஐடி ஊழியர் கவினை, சுர்ஜித் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்துவருகின்றன. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த சூழலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை நேரில் சந்தித்து ஒன்றரை மணி நேரத்திருக்கும் மேலாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கவினிடம் காதலுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நம்பும்படி பேசி வரவழைத்து கொடூரமாக கொலைசெய்துள்ளார்கள் என குற்றஞ்சாட்டினார்.
நம்பவைத்து கொலை செய்துள்ளார்கள்..
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். இழப்பீடுகளால் இந்த துயரத்தை துடைத்தெரிய முடியாது. அனைவரிடமும் பணிவோடு பழகக்கூடிய பண்புடையவராக இருந்துள்ளார் கவின். அப்படிப்பட்ட ஒருவரை நயந்து பேசி நம்ப வைத்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து கொலை செய்திருக்கிறார்கள்.
கொலை செய்த சுர்ஜித்தின் சமூகவலைதள பதிவுகளை பார்க்கும்போது, அவர் சமீப நாட்களாகவே கத்தியுடன் ஒவ்வொரு நாளும் புகைப்படங்களை பகிர்ந்து ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் கவினுடன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை, நம்பக்கூடிய அளவிற்கு நெருக்கமாகவே உறவாடியிருக்கிறார். அந்த நம்பிக்கையால் தான் கவின் சுஜித் அழைத்ததுமே அவர் பின்னால் சென்றிருக்கிறார். அதனால் திடீரென உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்ய வாய்ப்பில்லை. திட்டமிட்டே இந்த கொலை செய்யப்பட்டிருக்கிறது.
இருவரின் உறவும் இரு குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கிறது. மருத்துவமனைக்கு வந்த 20 நிமிடங்களில் இதையெல்லாம் நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்து மகனை காணவில்லை என்று கூறிய பிறகு தான் தாய்க்கு தெரிய வந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு கவின் தாயாரை 3 மணி நேரம் காவல் நிலையத்தில் காக்க வைத்துள்ளனர். காவல்துறையினருக்கு முன்பே இந்த சம்பவம் தெரிந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தெரிந்தோ தெரியாமலோ சுர்ஜித்தின் தாய் தந்தையினர் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சுர்ஜித்தின் தாயாரை கைது செய்ய வேண்டும். திட்டமிட்டு தான் இந்த படுகொலை நடந்திருப்பதாக தெரிகிறது. அதிகாரிகள் இதனை முறையாக விசாரிக்க வேண்டும், குறிப்பாக சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இடம் விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு உரிய நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
கவின் காதல் செய்ததாக கூறி வீடியோ வெளியிட்ட பெண்மணி யாருடைய கட்டுப்பாட்டில் இருந்து அச்சுறுத்தலின் காரணமாக இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார் என்பது தெரியவில்லை” என திருமாவளவன் பேசியுள்ளார்.