மகளிர் உரிமைத்தொகை: தமிழ்நாடு அரசுக்கும், முதல்வருக்கும் எம்.பி. திருமாவளவன் கோரிக்கை!

“கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மண்டல வாரியாகவும் அமைக்கப்பட வேண்டும்”- விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது தந்தை தொல்காப்பியன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் மண்டல வாரியாக அமைக்கப்பட வேண்டும்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அதாவது மேற்கு மாவட்டம், டெல்டா மாவட்டம், திருச்சி போன்ற மைய மாவட்டங்களில் இத்தகைய உலக தரம் வாய்ந்த நூலகங்கள் அமைவது, இளம் தலைமுறையினர் மேலும் தங்களை வலிமைப்படுத்திக்கொள்ள உதவும். மேலும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும்” என கூறினார்.

மகளிர் உரிமைத்தொகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “பொருளாதாரம் மட்டுமல்லாமல் பல அளவுகோளை கட்டுப்பாடுகளாக வைத்திருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள், பெரும்பாலான பெண்களுக்கு உரிமைத் தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.

பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் அந்த வரையறைகளை வகுத்திருக்கலாம். ஆனால் அந்த வரையறைகள் பரிசீலனைக்குரியது என்றே நான் கருதுகின்றேன்.

பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் அரசு கொண்டு வர வேண்டும். முதல்வரும் அதற்கு முன் வரவேண்டும். நான் முதல்வருக்கு இதை கோரிக்கையாக வைக்கிறேன்” கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com